Wednesday, August 26, 2009

ஒளிக்கு அப்பால்

சற்றே சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் புலனாகின்ற உண்மை ஒன்று உண்டு; அது நாம் அறியாமையில் இருக்கிறோம் என்பதுதான். விஞ்ஞானம், கலை என்று பல விஷயங்களை நாம் அறிந்திருக்கலாம். ஆனால் இவை சில தகவல்களே தவிர உண்மையறிவு ஆகாது. நம்மைப்பற்றிய அறிவே உண்மையறிவு.

நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே போய்க்கொண்டிருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்ற எதுவும் தெரியாத நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், அடுத்த கணம் என்ன நடக்கப்போகிறது என்பது கூட நமக்குத் தெரியாது. அதனால் தான் உபநிஷத ரிஷி, "இறைவா! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவின் ஒளிக்கு அழைத்துச் செல்வாய்(தமஸோமா ஜ்யோதிர் கமய)" என்று பிரார்த்தனை செய்கிறார்.

அத்தகைய பிரார்த்தனைகளின் பலனாக, ஜபம் தவம் போன்ற ஆன்மீக சாதனைகளின் பலனாக இறைவனின் அருட்கிரணம் நம்மில் பட்டு நமது உணர்வின் ஒளியைத் தூண்டுகிறது. நமக்கு ஒளியின் காட்சி, ஒளிமயமான இறைவனின் காட்சி கிடைக்கிறது; அறியாமை இருள் விலகுகிறது; எல்லாம் நமக்குப் புரிகிறது.

ஆனால் ஒளியின் காட்சியுடன் நமது பயணம் நின்று விடவில்லை. அறுதி உண்மை என்பது அனைத்தையும் கடந்தது; இருள்-ஒளி, துன்பம்-இன்பம், தீமை-நன்மை போன்ற அனைத்து இருமைகளுக்கும் அப்பாற்பட்டது. அந்த இடத்தை அடையும்போது தான் நமது பயணம் லட்சியத்தை அடைகிறது. எனவே, ஒளிமயமான காட்சியைப் பெற்ற முனிவர் தன்னை ஒளிக்கும் அப்பால் அழைத்துச் செல்வதற்குப் பிரார்த்திக்கிறார்.

ஒளிக்கு அப்பால் இருப்பது என்ன?

ஒளிக்கு அப்பால் தம்மையே காண்பதாக உபநிஷத முனிவர் கூறுகிறார். அறுதிநிலை அனுபூதி இது. இதனைப் படிப்படியாக இந்தௌ உபநிஷதத்தில் நாம் காண்கிறோம்.

மூலம் : ஈசாவாஸ்ய உபநிஷதம், ராமகிருஷ்ண மடம், சென்னை.

No comments: