வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
உபநிஷதங்கள் பல. அவற்றுள் நூற்றியெட்டு பொதுவாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதிநான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவை கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன. இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார்.
| ஐதரேய, கௌசீதகி | ரிக் |
| ஈச, கட, தைத்திரீய,பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண | யஜூர் |
| கேன, சாந்தோக்கிய | சாம |
| ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய | அதர்வண |
மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிற்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்று அடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிஷதமும் தனக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகிறது. இந்த பாதை வித்யை எனப்படுகிறது. வித்யைகள் எண்ணற்றவை. 14 முக்கிய உபநிஷதங்களில்ய்மாக சுமார் 35 வித்யைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வித்யைகளின் செயல்முறைகளோ சரியான பொருளோ நமக்குத் தெரியவில்லை.
மூலம் : உபநிஷதங்கள். ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை - 4

No comments:
Post a Comment